Monday, February 2, 2015

கொற்கை நன்றே

கொற்கை

ஆசிரியர் : ஜோ.டி.குருஸ்

காலச்சுவடு பதிப்பகம்

சாகித்ய அகாடமி பரிசு பெற்றது







                                                                       
வணிகக் கப்பல் கழகம் ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றும் ஜோ.டி.குரூஸின் இரண்டாவது நாவல் கொற்கை   இவரது முதல் நாவலான 'ஆழி சூழ் உலகு'ம்  பரதர் வாழ்வு பற்றியதே.  இந்த நாவல்களில் சாமியார்கள் மற்றும் ஊர்ப் பெரிய மனிதர்களின் 'யோக்கியதையை' விவரித்து இருந்ததால் இவரை ஊரை விட்டு விலக்கி வைத்திருக்கிறார்கள்.

தூத்துக்குடி பரதவர்களின் 1914 முதல் சுமார் ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைச் சொல்லும் புதினம் கொற்கை.  ஆங்கிலேய ஆட்சி தொடங்கி, சுதேசி போராட்டம் வழியாக, கழக ஆட்சிகள் வரையிலான அரசியல் காரணிகளின் தாக்கம், கத்தோலிக்க - சேசு சபைகள், புதிதாக உருவாகி வந்த நாடர்களின் வர்த்தக வளர்ச்சி ஆகியவை பல படிகளில் இருந்த பரதவர் அதிகாரச்  சமநிலையில் ஏற்படுத்திய அதிர்வுகளைப்  பின்னணியாகக் கொண்டு அருமையான புதினம் ஒன்றைப் படைத்திருக்கிறார்.   காலச்சூழலில், கொடிபறந்த குடிகள் நசித்துப்போவதும், பொருள் ரீதியாக விலக்கப்பட்டவர்கள் மேலேழுவதும் விதியாகவே உள்ளது.  இவ்விதிக்கு பரதவர் குடிகளும் விலக்கில்லை.  இந்த நகைமுரணை தொட்டும் தொடாமலும் வாசகர்களின் கற்பனைக்கே ஆங்காங்கே விட்டுச் செல்கிறார் குரூஸ்.

" கிரேக்கரும், சீனரும், சோனகரும், பொர்ச்சுகீசியரும், வெள்ளையரும் வந்து வாணிபம் வளர்த்த பரதவரின் தொனித் துறைமுகம் இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது....
" தேய்ந்து போன மூன்று மிதியடிகளை ஒன்றைச் சேர்த்துத் தைத்து, பார்க்கப் பாவமாக இருந்த்தது.  நெருங்கிப் பார்த்தால் அந்தக்  காலத்தில் தூத்துக்குடியில் கப்பலோட்டி வாழ்ந்த குடும்பத்தின் வாரிசு."

...
பரதவரின் பூர்வீக பூமியாக விளங்கிய தூத்துக்குடியில் அவர்களது பவுசும் மவுசும் இன்று பழங்கதையாகிப் போனது..
காலத்துக்கு ஏற்றாற்போல் வழக்கத்தில், மன நிலையில் மாற்றம் ஏற்படாததின் விளைவுகள்."
"பருத்தி யாவாரத்துக்குன்னு நாடார் வந்திற்றுப் போறாரு.  கடலுக்குள்ள தலயவுட்டுகிட்டு உப்பேறி  அலையாதைங்க.  கொஞ்சம் வெளியையும் வந்து நாட்டு நடப்ப தெரிஞ்சிக்கிருங்க.  யாரு வாரதையும் யாராலயும் தடுக்க முடியாது.."

கொற்கையின் நூறாண்டு கால வரலாற்றில் ஏராளமான கதை மாந்தர்கள் வந்து செல்வது தவிர்க்க இயலாதது.   அவர்களில் பலர் ஆவணப்படுத்தப்பட்ட நிஜ மாந்தர்கள். 'பிலிப் தண்டல்' என்ற சரடு நாவலின் ஊடாக முழுதும் செல்கின்றது.  கதை முழுதும் தூத்துக்குடி வட்டார வழக்கிலேயே அமைந்துள்ளதால் அந்த வாடையும் கதை மாந்தர்களின் பெயர்களும், வட தமிழக வாசகர்களிடம் மேலும் உழைப்பைக் கேட்கின்றன. புத்தகத்தின் பின்சேர்க்கையில் சில அருஞ் சொற்களுக்குப் பொருள் கொடுத்திருக்கிறார்.  அந்தப் பட்டியல் போதுமானதாக இல்லை.  மீன்பிடி தோணிகள் மற்றும் சரக்கு ஏற்றும் தோணிகளிலேயே எத்தனை வகை!  அவற்றின் முழுக்கட்டுமானத் தொழில் நுட்பங்கள், காற்றை முகர்ந்தும் உணர்ந்தும் தோணியைக் கையாளும் விவரங்களைப் பார்த்தால், ஆதி பரதவரின் நுண்ணறிவையும் பட்டறிவை யாரும் வியக்காமல் இருக்க முடியாது.  அவ்வகையில் இந்த நாவல் ஓர் ஆவணம் என்றே சொல்லலாம்.  கொற்கையிலேயே கொழும்புக்கு நடை அடிக்கும் 'ரெஜினா' தான் வேகம்.  அதன் அழகிலேயே மயங்கிக் கிடப்பவர் கிலுக்குத் தண்டல்(தோணித் தலைவன் ).


1914, பெயரளவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கடைசி பாண்டியபதி தொன்மிக்கேல் பரதவர்மா பாண்டியன் இறப்பில் தொடங்குகிறது.  வெள்ளைக்கார அரசாங்கமும், கொழும்பு செல்வந்தர்களும், 'இங்கிலிஸ் கெளப்புல' நுழைய தகுதி பெற்ற கொற்கை மேசைக்காரர்களான ரிபேரோக்களும் கர்டோசாக்களும் மோத்தாக்களும், அவர்களைத் தன் சுட்டுவிரல் அசைவில் கட்டுக்குள் வைத்திருக்கும் கத்தோலிக்க நிர்வாகமும்தான் பாண்டியபதியின் சீரழிவுக்குக் காரணமாக இருந்தன.  ஒரு காலத்தில் பாஞ்சாலங்குறிச்சிக்காரங்களுக்கு உதவி செய்ததாலேயே வெள்ளைக்கரர்களுக்கு பாண்டியபதி அவர்களைப் பிடிக்காமல் போயிற்று.   அந்த நிலையிலும் முத்துச் சிலாபத்தில் தன் இனத்தவருக்கு ஓரளவு நியாயம் கிடைக்கச் செய்தவர்  பாண்டியபதி.  மலபார் சிப்பி, பூந்தோட்ட சிப்பி, சின்னப்பார் சிப்பி, போன்ற பலவகை சிப்பிகளும் கடற்கரையில் ஏலம் விடப்பட்டு இந்தியா முழுதும் இருந்து வியாபாரிகள் வாங்கினர்.  அந்தந்த சாதித் தலைவர்களுக்கும் சிப்பி மானியங்கள் வழங்கப்பட்டன.  சங்கு,  சுண்ணாம்புக்கு ஆயிற்று.  கொஞ்சம் தள்ளி உப்பளங்களும் உற்பத்தி செய்ய, கொற்கை வியாபாரம் தாராளமாகவே நடந்தது.

பம்பாயிலிருந்து பஞ்சுப்பொதிகளும் பலவகை சாமான்களும் கொண்டு வந்த கப்பல்கள் ஏற்றுமதியாக பெரும்பாலும் உப்பைக் கொண்டு சென்றன.  1915 வாக்கில், ஸ்டீம் எஞ்சின் வைத்துப்  பெருமளவில் கொற்கையிலிருந்து நூல்  ஏற்றுமதி ஆனதால் அங்கு நடந்ததெல்லாம் 'மில்லுக்காரங்க' ஆட்சிதான்.  "விடிய வேலக்கி வாரதுவள பொழுது அடையிறதுவார வச்சி வேல வாங்குரான்வ..  நூலாபீஸ் பிரச்னைல செதம்பரம்பிள்ளையும் தாடிக்காரமும் (சுப்ரமணிய சிவா) தான் கூட நின்னாங்க".   இதே சிதம்பரம் பிள்ளை அவர்கள்தான் 'தொழில் தெரியாமல் பம்பாய்க்காரனை நம்பி ஓட்டைக்கப்பல் வாங்கி ஏமாந்ததற்குப் பதில் கொற்கையில் ரெண்டு தோணி வாங்கி விட்டிருந்தால் லாபம் பார்த்திருக்கலாமோ" என்று பின்னாளில் புலம்பினாராம்.

தோணி நடை போய் வருவதை விட மூச்சடக்கி, சுறா மீன்களிடையில் முத்துகுளிப்பது பெரும் சாகசமான வேலை.
"மூச்ச அடக்கிப் போறவனுக்கு தான் தண்ணிக்கிள்ள இருக்கது  மறந்துரும்.  கூட ஒரு சங்கு... கூட ஒரு சிப்பியின்னு ஆச உடாது.. கூட ஒரு சங்கெடுக்குற அந்த சொடக்கு போடுற நேரம், உசுரக்குடிச்சி போடும்."
"இதெல்லாம் தெரிஞ்சும் புள்ளயல எப்புடின்னேம் சங்கு குளிக்க அனுப்புதிய?"
"பிச்சைக்கனி, எண் ஜான் ஒடம்புக்கு சிரசே பிரதானமின்னு எவஞ்சொன்னாம்.  என்னய கேட்டா.. வவுருதாம் பிரதானம்"  என்றார் தஸ்நேவிஸ்.

மேசைக்கரர்களும் ஒரு காலத்தில் மெனக்கெடுவர்கள்தான்.  வசதி வந்ததும் சாமியார்கள் சிபாரிசுடுடன் வெள்ளைக்காரர்களோடு வெள்ளைக்காரர்களாக மாறி விட்டனர்.  பணக்காரர்கள் இடையே சிண்டு முடிவது, ஏழை பாழைகளைப் பிரித்து வைப்பது, ஆகியவற்றின் மூலம் சாமியார்கள் தங்கள் அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டனர்.  மாதா கோயில் திருவிழா வசூல் பெட்டிகளில் ஆயருக்கும் பங்கு தந்தைகளுக்கும் போக மிஞ்சியவையே கோயிலுக்குப் போய் சேர்ந்தன.

கொற்கையின் புது வரவான நாடார்கள் தம் கடும் உழைப்பிநாலும் துணிவினாலும், நகரின் பொருளாதாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்தத் தொடங்குகின்றனர்.  வெறும் தலையில் கருவாடு சுமந்து சென்று விட்ட ஆண்டி நாடார் போன்றோர் தம் தலைமுறையிலேயே பெரும் செல்வந்தர் ஆகின்றனர்.  வீண் பெருமையில் காலம் கழிக்கும் 'பழைய' பணக்கார்களுக்குத் தம் கையை விட்டு நழுவும் வஸ்து கண்ணுக்குத் தெரியவில்லை.   டொமினிக் ரிபேரா தம்முடைய மங்கள நிவாஸ் மாளிகையின் வெளியே 'ரெண்டு வெள்ளைக்கார சிப்பாய்களைக்' காவலுக்கு வைத்துத் தம் அந்தஸ்தைக் காட்டுகிறார்.  அநேகமாக,  'செட்டில்' ஆன எந்த சமூகத்துக்கும் இந்த விதி பொருந்தும்தானே.  வியாபாரத்தைக் கையகப்படுத்திய நாடார்கள் தமக்கென 'பேங்கு' ஒன்றையும் செய்தித்தாள் (தினத்தந்தி ) ஒன்றையும் உருவாக்குவது  கொற்கையின் அடித்துக் கொண்டு சிதறிக் கிடந்த பழைய 'மேசைக்காரர்'களுக்கு 'யார் முதலாளி' என்று அனுப்ப பட்ட ஓலையாகவே அமைகிறது.   ஆண்ட பரம்பரையினர் அடி மண்ணாகி வழக்கொழிவது வழுவல, கால வகையினானே.

தகப்பனின் அடிக்கு பயந்து கொற்கைக்குப் போய் பிழைத்துக் கொள்ளுமாறு தாய் அனுப்ப, சிறுவன் பிலிப் கலிங்கராயன்  ரயிலேறி கொற்கை வருகிறான்.  இவன்தான் கதை நெடுக வரும் ஒரே பாத்திரம்.  கொற்கையில் இவனது சித்தப்பா லொஞ்சி, ஆண்டாமனியார் தண்டளாக இருக்கும் தொனியில் 'கால் பங்குப் பையனாக'  சேர்த்து விடுகிறார்.  கடும் உழைப்பினால் ஆண்டாமணியாரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகிறான் பிலிப்.  கடலில் வலம்புரி சங்கு குளிக்கப் போன மருமகன் இறக்க, ஆண்டாமணியாரின் இளம் மகள் சலோமி கைம்பெண்ணாகிறாள்.  தனது தந்தையின் இடத்தில் வைத்திருக்கும் அவரின் துயரம் பொறுக்க முடியாமல் பிலிப் சலோமியை மணந்து கொள்கிறான்.  தன்னுடைய கடும் உழைப்பாலும், திறமையாலும்,  நேர்மையாலும் மட்டுமே பிலிப் சொந்தமாகத் தோணிகள் வாங்கி ஓட்டும் அளவுக்கு வளர்கிறான்.  சித்தி ரஞ்சிதம் கடைசி வரை வன்மம் வைத்துத் தொல்லைகள் கொடுத்தாலும் அவள் மகனைப்  பாசத்துடனே கவனிக்கிறான்.  பிலிப்பின் குடும்பத்தில் அவனே முதலும் கடைசியுமான தோணிக்காரன்.  பிள்ளைகளால் எந்த உதவியும் இல்லை.  பேரப்பிள்ளைகளும் அதே விதிப்படிதான் வளர்கிறார்கள்.  சென்னையில் கப்பல் கம்பெனி வைத்திருக்கும் சண்முக நாடார் மட்டும் கடைசி வரை நட்பை மறக்கவே இல்லை.  மற்றபடிக்கு சிறிதளவே வந்து போகும் ஏராளமான கதை மாந்தர்கள் சுவாரஸ்யமாக வந்தாலும் பாதிப் பேர்களுக்கு மேல் நினைவு வைத்துக் கொள்வது வாசகருக்குச்  சற்றுக் கடினமான காரியமாகவே இருக்கிறது.  இந்தக் குறை ஒன்றும் கதை ஓட்டத்தை பாதிப்பதே இல்லை என்பதுதான் வியப்பு.  எப்படிப் பார்த்தாலும் மானுட வாழ்க்கை என்பது சுவாரஸ்யம் கொண்டதாகவே இருக்கிறது.
பிலிப் கலிங்கராயன் காணும் காட்சிகள் வழியாகவே ஆங்கிலேயர் ஆட்சி,  சுதந்திரப் போராட்டம், பிறகு காங்கிரஸ் ஆட்சி தொடங்கி எம்.ஜி.ஆர் ஆட்சி, மற்றும் கொற்கையின் சமூக இழைகள் மீதான அவற்றின் பாதிப்புகள், ஆகியவற்றைத் தொட்டுத் தொட்டு செல்கிறார் ஆசிரியர்.  இடையே நடிகர் சந்திரபாபு கொற்கையில் பெண் பார்க்க வந்த கூத்தும் உண்டு.  கொற்கை வணிகத்தின் பெரும்பகுதி கொழும்பு வணிகம் ஆனதால் கொழும்பின் அரசியல் வரலாறும் நெடுக வருகின்றது.  இதில் வரும் ஈழத்தமிழர் கதை, நாம் வழக்கமாகப் படித்த விகடன், நக்கீரன் வகைக் கதைகளில் இருந்து மாறுபட்டிருக்கிறது.  மேற்படி விபரங்களுக்குப் புத்தகத்தைப் பார்க்கவும்.
இந்த நாவலை வெறும் கதையாகவோ அல்லது ஆவணமாகவோ,  எவ்வகையில் படித்தாலும் திகட்டாத ஒன்றாகவே இருக்கிறது.
காவல் கோட்டம்,  கொற்கை மற்றும் அஞ்ஞாடி  ஆகிய நாவல்களுக்கு உள்ள ஒற்றுமைகள்: அவை யாவும் அடித்தட்டு மக்களின் சமூக வரலாற்றைப் பதிவு செய்தவை,  சுமார் 1000 பக்கங்கள் கொண்டவை, மூன்றும் சாகித்ய அகாதமி வென்றவை.  அவை யாவும் சுவையானவை.

1 comment:

Anonymous said...

Great review !

Post a Comment