Thursday, January 9, 2014

குழந்தைகளை நம்புங்கள்




குழந்தைகள் கற்கும் விதம்
Lifelong Books, De Capo Press
USD 16.00
ஆசிரியர்:  ஜான் ஹோல்ட்

உங்களால் குழந்தைளின் கல்வியைப் பற்றி ஒரே ஒரு புத்தகத்தைத் தான் படிக்க முடியுமென்று இருக்குமேயானால், ஆசிரியர் ஜான் ஹோல்ட் எழுதிய இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். 1967ல் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், இன்றும் குழந்தைகள் எப்படிக் கற்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முயலும் அனைவருக்கும் பரிந்துரைக்கப் படும் புத்தகங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.  நவீன யுகத்தில் குழந்தைகள் கற்கும் விதம் பற்றிய (ஐந்து வயதிற்கும் கீழே உள்ள குழந்தைகளுக்கான கல்வி), ஒரு கூர்மையான பார்வையை முன் வைத்தவர் ஜான் ஹோல்ட். 



குழந்தைகள், பெரியவர்களைக் காட்டிலும், இயல்பாகவே அதிகம் கற்கும் திறன் கொண்டவர்கள்.  குழந்தைகளின் இந்த இயல்பான கற்றல் திறனை ஆர்வ மிகுதியால், பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வி என்ற பெயரால் குலைத்து விடுகின்றனர் என்கிறார் ஜான் ஹோல்ட்.  இது ஒரு வலுவான குற்றச் சாட்டு.  குழந்தைகளால் எப்படி, தம்மாலேயே எதையும் கற்றுக் கொள்ள முடியும்?  பெற்றோர்களும், ஆசிரியர்களும் தான் பிரச்னையா?  இது என்ன அபத்தமான பார்வை, என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுவது இயல்பே.  நம் முன் முடிவுகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவர் வாதங்களை பரிசீலிக்கலாம். 

குழந்தைகளின் கற்கும் திறன்

கன்றுக் குட்டி பிறந்தவுடன் எழுந்து நிற்கிறது.  மீன் குஞ்சுகள் பிறந்தவுடன் நீந்துகின்றன.  இவற்றோடு ஒப்பிடும் போது, குழந்தைகள் பிறந்தவுடன் எந்தப் பெரிய பௌதீகச் செயலையும் செய்யும் திறனற்றவர்கள் என்பது உண்மையே.  ஆனால், இதே குழந்தைகள், ஐந்து வயதாவதற்குள், வேறெந்த மிருகத்தாலும் செய்ய முடியாத, சிக்கலான காரியங்களைச் செய்யும் திறன் கொண்டவர்களாக - உதாரணமாக, மொழியை இலக்கணத்துடன் பேச்சில் கையாளுதல் போன்ற உயர் நிலைத் திறன்களை கொண்டவர்களாக – மாறுவது எப்படிச் சாத்தியமாகிறது?  ஒரு நாள் கூட பள்ளிக்குச் செல்லாத குழந்தை, பிறக்கும் போது மொழி என்றால் என்ன என்று கூடத் தெரியாத குழந்தை, ஐந்தே வருடங்களில் பேசுகிறதே? அது எப்படி?  பல ஆண்டுகள் முறையாக கல்வி பயின்ற, கல்லூரிப் பட்டம் பெற்ற, ஒருவரால் கூட, தமக்குத் தெரியாத ஒரு மொழியைக் கற்க மிகுந்த பிரயத்தனப் பட வேண்டி உள்ளதே?   குழந்தையாயிருந்த போது நம்மில் உறைந்திருந்த கற்கும் திறன், நாம் வளர்ந்த பிறகு எங்கே போய் விடுகிறது?  வயதான பின்னர், நாம் கற்றுக் கொள்ளத் தடுமாறுவதற்கு என்ன காரணம்? இவை தான் ஜான் ஹோல்ட்டின் அடிப்படையான கேள்விகள்.

வயதாக, வயதாக நாம் உலகைப் பற்றிய ஒரு புரிதலை, ஒரு கருத்துப் படிவத்தை (idealogical model) உருவாக்கிக் கொண்டு விடுகிறோம்.  புதிதாக ஏதாவது ஒன்றை கற்க முயலும் போது, உலகத்தைப் பற்றிய நம் படிவத்திற்கு ஒவ்வாத விஷயங்களை முற்றிலும் ஒதுக்கி விட்டு, தேவையானதை மட்டும் கற்க முயல்கிறோம்.  இந்த அணுகுமுறை ஒரு துறையில் விரைவாக நிபுணத்துவம் பெற மிகவும் உதவலாம். இந்த ஒரு அனுகூலத்தை மனதில் வைத்துக் கொண்டு, நாம் குழந்தைகளின் கல்வியை பெரும்பாலும் தகவல்களைத் திறம்படத் தொகுத்து அளிக்கும் ஒரு பயிற்சியாகப் பார்க்கிறோம். நல்ல ஆசிரியர் என்பவர் திறம்பட தகவல்களை தொகுத்து வழங்கும் திறம் கொண்டவர் என்றும், புத்திசாலி மாணவர்கள் அந்தத் தகவல்களை விரைவில் கிரகித்துக் கொள்பவர்கள் என்றும் நம்புகிறோம்.

இந்த அடிப்படையில் கல்வியை மதிப்பிடுவதால்,  எதையும் விரைவில் கற்றுக் கொள்ளும் திறனுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கிறோம்.  கல்வி ஒரு சர்க்கஸ் சாகசமாக மாறி விடுகிறது. இதன் பின் விளைவுகள் ஆழமானவை.  உதாரணமாக, தனக்குத் தெரியாத ஒன்றைச் செய்ய, ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று 'படித்த'வர்களை அழைத்தால், அந்த அழைப்பை பெரும்பாலாணோர் ஏற்றுக் கொள்வதில்லை.  ஏதாவது சால்ஜாப்பு சொல்வார்கள்.  இல்லையேல், அது ஒன்றும் முக்கியமான ஒன்று அல்ல என்று வாதம் செய்வார்கள். இதற்கு என்ன காரணம்? புதிதான ஒன்றைக் கற்கும் போது, நேரும் பிழைகளை அவரால் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.  தான் ஒன்றை, விரைவில் கற்றுக் கொள்ளா விட்டால், தான் ஒரு புத்திசாலி அல்ல என்று பிறர் (தானும்) கருதக் கூடும் என்று உள்ளூர அஞ்சுகிறார்.   இந்த அச்சம் கல்வி என்பது தகவல் தொகுப்பு மட்டுமே என்ற புரிதலின்  நேரடி விளைவு.  வயதான அனைவரும், தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் படிப்படியாக வளர்வதை/கற்றுக் கொள்வதை மட்டுமே விரும்புகிறார்கள்.  தெரியாத துறைகளில் நுழைவதை, பயனற்றதாக, முட்டாள்தனமான ஒன்றாகக் கருதுகிறார்கள். இப்படி ‘வளர்ந்த பெரியவர்களின்’ கற்றல் முறையை குழந்தைகளின் இயல்பான கற்றல் முறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
  
குழந்தைகளின் கற்றல் முறை:

குழந்தைகள், பிறந்தவுடன் எந்தத் திறமையும் கொண்டவர்கள் அல்லர். அவர்களிடம் உலகைப் பற்றிய எந்த முன்முடிவுகளும் (படிவங்களும் - models) இல்லை.  குழந்தைகளின் உலகம் பெரும் விந்தைகளும், குழப்பங்களும், சிக்கல்களும் நிறைந்த ஒன்று.  குழந்தைகள் தம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கு தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கின்றனர். உதாரணமாக, குழந்தை அழுகிறது என்று வைத்துக் கொள்வோம். குழந்தையின் அழுகைக்கு வரும் எதிர் வினையை குழந்தையின் பார்வையில் பார்ப்போம்.  சில சமயம், குழந்தை அழும் போது, அம்மா வந்து பால் கொடுக்கிறார்கள். பிறிதொரு முறை, அப்பா வந்து இடுப்புத் துணியை மாற்றுகிறார்.  இன்னொரு முறை, தாத்தா எடுத்துக் கொஞ்சுகிறார்.  இப்படி, குழந்தையின் ஒரே செய்கைக்கு (அழுதல்), பல விதமான எதிர்வினைகள் விளைகின்றன.  இந்தப் பல எதிர்வினைகள் கூட நிரந்தரமானவை அல்ல. சில சமயம், குழந்தை பசியால் அழும் போது, அப்பாவிற்கு பதில் அம்மா வந்து வந்து இடுப்புத் துணியை மாற்றலாம். அல்லது, அம்மாவிற்குப் பதில், அத்தை வந்து உணவு புகட்டலாம்.  அல்லது, தாத்தா வந்து கொஞ்சி விளையாடலாம். ஆக, குழந்தையின் பார்வையில் வெளிஉலகம், நிச்சயங்களற்றது.  வெளி உலகின் விதிமுறைகள் எளிதில் புலப்படாதவை.  இருந்தாலும், அந்தக் குழந்தைக்கு உலகைப் பற்றி, ஒவ்வொரு முறை அழுகும் போது, இன்ன நிகழலாம் என்ற ஊகம் மெலிதாக இருக்கிறது.  பல முறை, ஒரு நிகழ்வு தொடர்ந்து நடக்கும் போது, அந்தக் குழந்தையால், தன்னுடைய ஊகத்தை கொஞ்சம், கொஞ்சமாக வலுவாக்கிக் கொள்ள முடிகிறது.  எந்தக் காரியத்திற்கு, யார் வருவார்கள், என்ன செய்வார்கள், என்பதைக் குத்துமதிப்பாக அந்தக் குழந்தை புரிந்து கொள்கிறது. ஒவ்வொரு முறையும், அந்தக் குழந்தையின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்று நிகழும் போது, தன் புரிதலைக் கொஞ்சம் விஸ்தாரப்படுத்தி, திருத்தி அமைத்துக் கொள்கிறது. உதாரணமாக, உணவு கொடுக்க அம்மா மட்டுமல்ல, அத்தையும் வரலாம் என்ற புரிதல், முதலில் இருந்த புரிதலைக் காட்டிலும் கொஞ்சம் விஸ்தாரணமானது.  முதலில் உணவென்பது, வெறும் பாலும், கஞ்சியும் மட்டும் தான் என்று எண்ணிய குழந்தை, முதலில் பருப்பைச் சுவைக்கும் போது, அந்தக் குழந்தையின் உணவு எனும் உலகம் விரிவடைகிறதல்லவா? இப்படி, முதலில் ஒரு காரண/காரிய தொடர்பைப் பற்றிய மெலிதான ஊகம், பின்னர் நிகழ்வுகள்/தவறுகள் மூலம் ஊகம் வலுப்படுதல்/தெளிவடைதல், வலுவடைந்த ஊகம் மூலம் உலகைப் பற்றிய புரிதல் விரிவாகுதல் என்ற தொடர் சுழல் மூலம் குழந்தைகள் கற்கின்றன.


இந்தக் கற்றல் முறையில் குழந்தைகளுக்கு முதலில் உலகைப் பற்றிய குறைவான/பிழையான புரிதல்கள் இருப்பது இயற்கையானது மட்டுமல்ல, தேவையானதும் கூட.  குழந்தைகளைப் பொருத்தவரை உலகம் ஒரு பரிசோதனைக் கூடம்.  தங்களது புரிதல்கள்/ஊகங்கள், தம் உலகை விளக்கப் போதுமானதாக இல்லாத போது, குழந்தைகள் இயல்பாகவே, தங்களது புரிதல்களை விஸ்தாரப்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. பெரும்பாலான பெரியவர்களிடம் இந்தத் திறன் இருப்பதில்லை.  உலகத்தைப் பற்றிய தங்களது முன்முடிவுகளை, படிவங்களை, வெகு சிலரே தங்கள் வாழ் நாள் முழுவதும் திருத்தி, மேம்படுத்திக் கொள்ள முனைகிறார்கள். 

குழந்தைகளும் விளையாட்டும்

குழந்தைகளின் கற்றல் முறையின் முக்கிய அம்சம் விளையாட்டும்/கற்பனையும் தான்.  தங்களை ஒரு ராஜாவாக, ராணியாக கற்பனை செய்து கொண்டு அவர்கள் விளையாடுவதை நாம் அதிகப் பட்சம் கொஞ்சம் அன்பு நிறைந்த பெரிய மனசோடு பார்க்கிறோம்.  பெரும்பாலான சமயம், ‘சரி, சரி விளையாடியது போதும். போய்ப் படி”, என்று அவர்களது முயற்சியை கனிவுடன்  மட்டம் தட்டுகிறோம். ஆனால், அந்த விளையாட்டுகள்/கற்பனைகள் மூலம் தான் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அத்தகைய விளையாட்டுகள் மூலம் குழந்தைகள் வெளியுலகத்தைப் பற்றிய குறியீடுகளை (Symbols) தங்களின் தேவைக்கேற்பத் தாமே உருவாக்கிக் கொள்கின்றனர். குழந்தைகள், தங்கள் விளையாட்டுகள் மூலம், தங்களை மீறிய உலகத்தை தங்களது உலகிற்கும் கொண்டு வருகிறார்கள்.  அதைப் புரிந்து கொள்கிறார்கள்.  நீங்கள் குழந்தைகளின் விளையாட்டுகளைத் தொடர்ந்து கவனித்தால், அந்த விளையாட்டுகள் கொஞ்சம், கொஞ்சமாக மிகவும் சிக்கலான விதிகளைக் கொண்டதாகப் பரிணாம வளர்ச்சி அடைவதைப் பார்க்கலாம்.  முதலில், பந்தை நேராகத் தள்ளி விட்டுப் பிடிப்பதை விரும்பிய குழந்தை, வெகு விரைவிலேயே பிறருக்கு எட்டாத வகையில் வீசுவதை விரும்புகிறது.  கொஞ்ச நேரத்திலேயே, அந்த விளையாட்டைத் தானே மாற்றி அமைத்தும் கொள்கிறது.  பெரியவர்கள் செய்ய வேண்டியது  குழந்தைகளின் விளையாட்டில் தலையிடாமல் இருப்பது மட்டுமே.

குழந்தைகளின் தவறுகளை அவசரப்பட்டுத் திருத்தாதீர்கள்

குழந்தைகள் தங்களைச் சுற்றியிருக்கும் உலகைப் பார்க்கும் போது ஆயாசமடையாமால் இருப்பது அதிசயம் தான்.  தங்களைச் சுற்றியிருக்கும் பொருட்கள் என்னவென்றோ, அவை எதற்காகவென்றோ குழந்தைகளுக்குத் தெரியாது.  அவர்கள் பார்வையில், அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும், கடவுளைப் போலத் தெரியும், பெரிய மனிதர்கள் (பெற்றோர்கள், ஆசிரியர்கள்) தாம் நிர்ணயிக்கிறார்கள்.  இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  ஒரு நாளில் நீங்கள் சந்திக்கும் அனைவரும் உங்களை விட பல மடங்கு புத்திசாலிகள். அவர்களால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உங்களைக் காட்டிலும் திறம்பட செய்ய முடியும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  மேலும், அவர்கள் உங்கள் மேலாளர் என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் எப்படி உணர்வீர்கள்?  அது தான் குழந்தைகளின் உலகம்.  இந்த உலகத்தில் தான் குழந்தைகள் தம் இருப்பை நிருவ வேண்டி உள்ளது. அப்படி நிருவுவதற்கு தேவையான எந்தத் திறமையும் இல்லாமல் இருக்கிறார்கள்.  இது, எவ்வளவு சிக்கலான காரியம்?  ஆனால், அதைச் செய்யும் தனித் திறமை கொண்டவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள்.

குழந்தைகள் தவறு செய்வது இயல்பானது.  உதாரணமாக, ‘பாஸ்கர்’ என்ற பெயரை, ‘பாக்கர்’ என்று ஒரு குழந்தை சொல்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்படிச் சொல்லும் குழந்தையை, பெரும்பாலான பெற்றோர்களும், ஆசிரியர்களும், “அது, பாக்கர் இல்லையம்மா, பாஸ்கர்”, என்று (அன்புடன்) திருத்துகிறார்கள். குழந்தையைப் பொருத்தவரை, ஒரு உயிருள்ள மனிதரை, ஒரு ஓசையைக் கொண்டு அழைப்பதென்பது மிகப் பெரிய சாகசச் செயல்.  இந்தச் செயலைச் செய்வதற்கு முன், அந்தக் குழந்தை, அந்தக் குறிப்பிட்ட மனிதரின் அங்க, அடையாளங்களை, அந்த மனிதரின் பெயருக்கான ஒலித்தொடரோடு இனைத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சாகசச் செயலைக் கொண்டாடாமல், அந்தக் குழந்தையின் பேச்சில் இருக்கும் பிழையைத் திருத்துவது, குழந்தையை இரண்டு விதங்களில் பாதிக்கிறது.  
முதலில், தாம் செய்யும் தவறுகளைத் தாமே உணர்ந்து திருத்திக் கொள்ளும் வாய்ப்பை அந்தக் குழந்தைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறோம். இப்படிக் குழந்தைகளை அடிக்கடித் திருத்துவது, இந்த உலகத்தை தன்னால் புரிந்து கொள்ள முடியும் என்ற குழந்தையின் தன்னம்பிக்கையைப் பாதிக்கிறது.  குழந்தைகள் முக்கியமாக கற்றுக் கொள்ள வேண்டியது, தாம் செய்யும் தவறுகளை தாமே கண்டுபிடித்து திருத்திக் கொள்ளும் திறனைத் தான்.  அந்த வாய்ப்பை நம் அவசரக் குறுக்கீடு தடை செய்கிறது.  இப்படி நான் எத்தனை முறை ‘அன்புடன்’ என் குழந்தைகளின் தவறுகளைத் திருத்தி இருக்கிறேன் என்று நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது. 

இரண்டாவதாக, குழந்தைகள் உலகைப் பற்றிய ஒரு படிவத்தை தாமே உருவாக்கிக் கொண்டால் மட்டுமே, அதைப் பற்றிய உறுதியான புரிதலோடு இருக்க இயலும்.  அதை விடுத்து, ஆசிரியர்களின்/பெற்றோர்களின் அவசரக் குறுக்கிடல்கள், குழந்தைகளுக்கு உலகத்தைப் பற்றிய புரிதலை இரவலாக மட்டுமே அளிக்கின்றன.  அவர்களால் தாமே சிந்தித்து உலகைப் பற்றிய அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும் முக்கியமான பயிற்சி இல்லாதவர்களாகி விடுகிறார்கள்.  இப்படிப் பட்ட உறுதியான புரிதல் நிகழ, குழந்தைகளுக்கு நேரம் அவசியம்.  அறிதலுக்கும், அறியாமைக்கும் இடையில் உள்ள சாலையை பல முறை முன்னும், பின்னும் கடந்து சென்று பின்னர் தான், அவர்களது ஊகங்கள் வலுவடைந்து, ஸ்திரமான அறிதலாகிறது.  இந்தச் சாலையில் பயனிக்கும் குழந்தைகளை நீங்கள் நெம்பித் தள்ளியோ, தரதரவென்று இழுத்துக் கொண்டோ, தூக்கிக் கொண்டோ, ஒரு பக்கத்தில் இருந்து, இன்னொரு பக்கத்திற்கு கொண்டு செல்ல முடியாது.   நீங்கள் குழந்தைகளுக்கு அவகாசம் கொடுங்கள்.  அவர்கள் செய்யும் பிழைகளை அவசரப்பட்டுத் திருத்தாதீர்கள்.  பிழைகள் அவர்களின் கற்றலின் இயல்பான படி நிலை என்று உணருங்கள்.  உங்கள் பதற்றத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள், என்று சொல்கிறார் ஜான் ஹோல்ட்.  குழந்தைகள் தாமே கற்றுக் கொள்வர், என்று உறுதியாக்க் கூறுகிறார்.
தற்கால கல்வி முறையில் உள்ள பிழைகள்

ஒரு பத்து கல்வியாளர்களை அழைத்து குழந்தைகளுக்கு எப்படிப் பேசக் கற்றுக் கொடுப்பது என்பதற்கான ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கச் சொன்னால், அவர்கள் என்ன செய்வார்கள்?

“முதலில், குழந்தைகளுக்கு அடிப்படையான சில ஒலிகளை (phonotic bases) சொல்லிக் கொடுக்கலாம்; அதன் பின்னர் அந்த ஒலிகளைக் கொண்டு எளிய ஒலித்தொடர்களை (எளிய வார்த்தைகள்) கற்றுக் கொடுக்கலாம்; பின்னர், அந்த ஒலித் தொடர்களை எப்படிச் சேர்ப்பது என்பதற்கான இலக்கண அடிப்படைகளைக் கற்றுக் கொடுக்கலாம்; அதன் பின்னர் அவர்கள் அந்த ஒலித் தொடர்களைச் சேர்த்து ஒரு வாக்கியத்தை அமைக்கக் கற்றுக் கொடுக்கலாம். ஒவ்வொரு படி நிலையிலும் மாணவர்கள் அந்தப் படி நிலைக்குத் தேவையானத் திறனை அடைந்து விட்டார்களா, என்று பரிசோதனை செய்த பின்னர் அடுத்த படி நிலைக்கு அனுப்பலாம்.”

இந்த மாதிரி பாடத்திட்டம் தானே வரும்?  இதை நீங்கள் பின்பற்றினால் என்ன ஆகும்?  சுருங்கச் சொன்னால், இப்படிச் சொல்லிக் கொடுத்தால் குழந்தைகள் பேசக் கற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தானே உண்மை?

ஆனால், நாம் இந்த அபத்தத்தைத் தானே கல்வி என்ற பெயரில் தொடர்ந்து செய்து வருகிறோம்?  இந்த ஒரு விஷயம் தெரிந்தால், உனக்குப் பின்னால் ஒரு நாள் உதவும், அதனால், இதை நீ இப்போது கற்றுக் கொள் என்று சொல்வது தானே பெரும்பாலான வகுப்புகளில் நிகழ்கிறது?  இதனால் எனக்கு, இப்போது என்ன பயன்? என்ற குழந்தைகளின் கேள்விக்கு நேர்மையான பதில் சொல்லத் தெரியாத பெற்றோர்களும் (ஆசிரியர்களும்), மிரட்டல் (சொன்னதைச் செய், இல்லாட்டி ...), லஞ்சம் (கண்ணா, இதைச் செஞ்ச பின் ஐஸ் கிரீம், சரியா?), அல்லது கெஞ்சல் என்ற குறுக்கு வழியில் குழந்தைகளைச் செய்ய வைக்கிறார்கள்.  இந்தச் சித்திரவதையினால் குழந்தைகள் வெகு விரைவிலேயே, கல்வி என்பது தங்களது வாழ்க்கையில் இருந்து வேறுபட்ட ஒன்று எண்ண ஆரம்பித்து விடுகிறார்கள்.
கற்றல் என்பது, அழுத்தமற்ற சூழலில், தனக்கு விருப்பமான ஒன்றை தெரிந்து கொள்ள முனையும் பொது  இயல்பாக நிகழும் ஒன்று.  கல்விக் கூடங்கள், இந்த வகையான கற்றல் நிகழும் சாத்தியங்கள் அதிகம் உள்ள களமாக இருக்க வேண்டும். குழந்தைகளை வற்புறுத்தாமல், சுவாரசியமான ஒரு சூழலை உருவாக்கினால் போதும்.  அவர்களே கற்றுக் கொள்வார்கள்.  உதாரணமாக, வகுப்பறையில் நீங்கள் பத்திருபது ஊசல்களை (பெண்டுலம்) வைத்து விட்டு, எதுவும் சொல்லாமல் இருந்தாலே போதும்.  அந்தக் குழந்தைகளே, கொஞ்சம், கொஞ்சமாக அந்தப் ஊசல்களின் அடிப்படைகளைக் கண்டு பிடித்து விடுவார்கள்.  ஊசல்கலைப் பற்றி நீங்கள் சொல்லித் தர திட்டமிட்டிருந்த கேள்விகள் இயல்பாகவே வரும்.  நீங்கள் திட்டமிடாத சில கேள்விகளும் வரும்.  

அப்படியானால், இது வரை உலகத்தில் கண்டு பிடிக்கப் பட்ட அனைத்து அறிவையும் குழந்தைகளே எப்படி கற்றறிந்து கொள்ள முடியும்? அதற்கான நேரம் இருக்கிறதா? என்ற கேள்விகள் நியாயமானவையே. குழந்தைகளை நாம் புதிதாக ஒரு சக்கரத்தை உருவாக்க்ச் சொல்லவில்லை. சக்கரம் இருக்கிறது.  அதைப் பற்றிய ஒரு படிவத்தை (model) அவர்களே உருவாக்கிக் கொள்ளும் ஒரு வாய்ப்பை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது தான் ஜான் ஹோல்ட் சொல்வது. அதை விடுத்து, சக்கரத்தைப் பற்றிய எல்லாத் தகவலையும், அவர்களுக்கு ஒரு வகுப்பில் உட்கார வைத்துச் சொல்லித் தருவது, சக்கரத்தைப் பற்றிய அறிவை இரவலாகத் தருவதற்கு ஒப்பானது.  சக்கரத்தைப் பற்றிய சாத்தியங்களைப் பற்றி அவர்களே சிந்தித்துப் புரிந்து கொள்வது, அவர்களது உண்மையான அறிவு.  அவர்கள் சக்கரத்தைப் பற்றி மட்டும் கற்றுக் கொள்வதில்லை.  அவர்கள், தமக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி எப்படிக் கற்றுக் கொள்வது என்றும் கற்றுக் கொள்கிறார்கள். அது தான் முக்கியம்.

குழந்தைகள் தமக்குத் தேவையானவற்றைக் கற்றுக் கொள்ள முயலும் போது கற்றல் சிரமமில்லாமல் நிகழுகிறது.  அந்த முயற்சியில் அவர்கள் பல முறை தோல்வி அடைவது கற்றலுக்கு அவசியமான ஒன்று.    அந்த முயற்சியில், அவர்கள் தோல்வியடைவதைத் தவிர்க்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் குறுக்கிடுவது தான் அவர்களது கற்றலைத் தடை செய்கிறது.  குழந்தைகள், கற்பது தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி மட்டுமல்ல.  அதை விட முக்கியமாக, அவர்கள் எப்படிக் கற்றுக் கொள்வது என்பதையும், தங்களால் எந்த விஷயத்தையும் கற்றுக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையையும் தான்.  இரண்டே வார்த்தைகளில் சொல்லப் போனால், “குழந்தைகளை நம்புங்கள்”, என்று சொல்கிறார் ஜான் ஹோல்ட்.

இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1967 ஆம் ஆண்டு வெளி வந்தது.  இந்த 1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மீள் பதிப்பில் (Revised Edition), ஜான் ஹோல்ட் முதல் பதிப்பின் வரிகளுக்கிடையே தனது புதிய புரிதல்களை பதிவு செய்துள்ளார்.  இது, முதல் வாசிப்பில் கொஞ்சம் இடரலாக இருக்கலாம். இந்தப் புத்தகத்தின் நடை கொஞ்சம் வித்தியாசமானது.  தனது அனுபவங்களை, தேதி வாரியாக, ஒரு நாட்குறிப்பு மாதிரி எழுதி இருக்கிறார். தனது கருத்துக்களை, மிகக் கவனமாக தனிப்பட்ட குழந்தைகளின் உதாரணத்துடன், தொகுத்து எழுதியுள்ளார்.  இந்தப் புத்தகத்தை நான் பலமுறை படித்தேன்.  ஒவ்வொரு முறையும், எவ்வளவு தூரம் உன்னிப்பாகக் கவனித்து குழந்தைகளின் கல்வியைப் பற்றி எழுதி இருக்கிறார் ஜான் ஹோல்ட், என்று ஆச்சர்யப் பட வைத்த புத்தகம் இது.  நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால், உங்கள் குழந்தையை சற்று வித்தியாசமான கோணத்தில் பார்ப்பீர்கள் என்பதில் எனக்கு இம்மியும் சந்தேகமில்லை. குழந்தைகளின் கல்வியைப் பற்றிய பதற்றம் நிறைந்த பெற்றோராக நீங்கள் இருந்தால், உங்கள் பதற்றத்தை இந்தப் புத்தகம் பெருமளவில் குறைக்கும்.


தொடர்புடைய சுட்டிகள்:

1. இதுவா கணக்கு
2. கல்வி  பற்றிய நரம்பியல் சார்ந்த புரிதல்
3. பெருகும் வேட்கை
4. ஆளுக்கொரு கிணறு
5. கல்வி என்பது - ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை


பி.குறிப்பு (சனவரி 28. 9:20): இந்தப் புத்தகத்தை தமிழில் திரு. அப்பனசாமி, எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர் என்ற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளதை அறிந்தேன்.  அந்த மொழிபெயர்ப்பின் விபரங்கள்:

எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்
ஜான் ஹோல்ட்
தமிழில்: அப்பணசாமி


பதிப்பகம்: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
421 அண்ணா சாலை, தேனாம்பேட்டை,  சென்னை-18
தொலை பேசி: 044-24332424

இந்திய மாணவர் சங்க வெளியீடு
விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம், சென்னை





3 comments:

clayhorse said...

ஹூம்.. இதெல்லாம் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குத் தெரிந்திருந்தால் என் பிள்ளைக்கு நன்றாயிருந்திருக்கும் ...
ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் என் பெற்றோருக்குத் தெரிந்திருந்தால் எனக்கு நன்றாயிருந்திருக்கும்

clayhorse said...

http://www.ted.com/search?q=ken+robinson

Unknown said...

இந்த புத்தகம் pdf வடிவில் online இல் free ஆக கிடைக்குமா?

Post a Comment