Friday, July 19, 2013

வாடிவாசல்

வாடிவாசல்

சி.சு. செல்லப்பா
வகை: குறுநாவல்
பதிப்பகம்: காலச்சுவடு
பரிந்துரை: கரிகாலன்/சண்முகம்

(குறிப்பு: இந்த அட்டைப் படத்தை எடுத்ததும் சி. சு. செல்லப்பா தான்)




நான் இதுவரை ஜல்லிக்கட்டை நேரடியாகப் பார்த்ததும்  இல்லை, அது பற்றி குறிப்பிடத்தக்க  அபிப்ராயங்களும் இருந்ததில்லை.  தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டைப் பற்றிய காணொளிகளின்  வழியாக நான் அடைந்த மனச் சித்திரம் - காளைகள் மிரண்டு ஓடுவதும், ஆட்கள்அங்குமிங்கும் கும்பலாக துரத்திக் கொண்டு போவதும் தான் - வாடிவாசல் புத்தகம் படிக்கும் வரை.


பிச்சி, மருதன் என்ற இரு இளைஞர்கள் ஜமீன்தாரின் காளையை  (காளையின் பெயர்: காரி) ஜல்லிக்கட்டில் அணைய (அடக்க)  மதியத்தில் இருந்து அந்தி மாலை வரைக் காத்திருக்கும்  சில மணி நேரங்களில் நிகழும் சம்பவங்களை ஒரு நேர்கோட்டில் சொல்லும் கதை - வாடிவாசல். இலக்கிய உலகில் பிரசித்தி பெற்ற கதை. இந்த முழு நீளக் கதையை, முதலில் உயிர்மையில் படித்த நினைவு. புத்தகமாக வந்த பின்னர் வாங்கிப் படித்தேன். எனக்கு, புத்தகத்தின் முன்னுரை என்பதெல்லாம் படிக்கப் பிடிக்காது. நேராகப் புத்தகத்தினுள் நுழைவது தான் வழக்கம். ஆனால், இந்தப் புத்தகத்திற்கு,  பெருமாள் முருகன் எழுதியுள்ள முன்னுரை அற்புதம்.  அவசியம் படிக்க வேண்டியது.



ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் நல்ல ஜாதிக்காளை என்று சில தான் வரும்.  இந்த இரு இளைஞர்களும், காரியை அணையக் காத்திருக்கிறார்கள்.  பிச்சியும், மருதனும் தெற்கத்தி கிராமத்தில் இருந்து வந்திருப்பவர்கள். நல்ல ஜல்லிக்கட்டு வீரர்கள் என்று அந்த ஊர்க்காரர்களுக்கு தெரிந்து விடுகிறது. அவர்கள் காரிக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதும் ஜமீன்தாருக்கும் தெரிய வருகிறது.  ஜமீன்தாரின் அதிகாரத்தின் ரூபம்,  காரி.  இதுவரை, யாரும் அதை மடக்கியதில்லை.  அந்த இளைஞர்களை மேடையில் இருந்து அவதானிக்கும் ஜமீன்தார், அவர்களது முகத்தில் தெரியும் தைரியத்தைக் கண்டு உள்ளூர பதற்றமடைகிறார்.  அது, நேரடிச் சவாலை சந்திக்கும் தருணம்அதிகாரம் கொள்ளும் பதற்றம்.
 சி சு. செல்லப்பா, அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்


காரி களத்தில் கால் வைக்கும் முன், பிச்சி, ஜமீன்தாரைப் பார்க்கிறான். ஜமீன்தாரும், தன்னையறியாமலேயே, "போ, போய் பிடி", என்று தலையாட்டுகிறார்.  இந்த இடத்தில் சி. சு. செல்லப்பாவின் சித்தரிப்பு அற்புதம். நிலப்பிரபுத்துவ விழுமியங்களில் ஒன்று, ஆண்டிக்கு மரியாதை செலுத்துவது.  பேசாமலேயே, தன் பார்வையிலேயே, அந்த மரியாதையை நயமாக ஜமீன்தாருக்கு செலுத்தி விடுகிறான், பிச்சி.  அந்த ஒரே கணத்தில், அவர் தான் பண்ணையார் என்ற சுய பிரக்ஞையில் இருந்து விடுதலை அடைகிறார்.   ஜல்லிக்கட்டில் பெரும் ஆர்வம் இருக்கும், காளை வளர்ப்பவராக மட்டும் ஆகி விடுகிறார். பிச்சி, அந்த மாட்டை அணைய வந்திருக்கும் ஒரு மாடு பிடிக்கும் வீரன் மாத்திரமே.  இத்தனைக்கும் இருவரிடத்திலும் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை. ஆனால், அனைத்தையும் பேசி விடுகிறார்கள்.


காரி,  ஜல்லிக்கட்டு களத்தில் நுழைந்தவுடன், கூட்டம் காணாமல் போய் விடுகிறது.   காரி, மிரண்டு ஓடும் காளை இல்லை.  நின்று நிதானமாக தன் சூழலை அளவெடுக்கும் காளை.  அந்தச் சில நிமிடங்களில்,  ஜல்லிக்கட்டுத் திடலே அமைதியாகி விடுகிறது. ஒரு கணம் கவனம் தவறினாலும் கொம்பில் குத்தி, எறிந்து விடும் காரி.   அனைவரின் கண்களும், காரியிடமும், அதைப் பிடிக்கத் தைரியமாக நிற்கும் பிச்சிவிடமும் தான் இருக்கின்றன.  அந்தத் தருணத்தில், ஜமீன்தார் இல்லை. பிச்சி எனும் சாதாரண குடியானவன் இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டு இருவரையும் சமன் செய்து விடுகிறது.  கூட்டமே, மூச்சைக் கூட விடாமல் , கப் சிப் என்று இருக்கிறது.   படிக்கும் நாமும் தான்.   இந்தக் கதைக்குப் பின்னால் இருக்கும் கதையை, நாவலில் படித்துக் கொள்ளுங்கள்.



நிலப்பிரபுத்துவ காலத்தில்,  கொம்பு சீவப்பட்ட என் முரட்டுக் காளையை அணைந்து அதன் கொம்பினிடை கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டை  (சல்லிக் காசுகளின் கட்டு) எடுத்துக் கொள் என்று சவால் விடும் செல்வம் நிறைந்த ஜமீன்தார்களுக்கும், உயிரைப் பணயம் வைத்து, எந்த ஆயுதமும் இன்றி, தன் புலன்களின் சக்தியை மட்டும் துணை கொண்டு அந்த முரட்டுக் காளைகளை அணைய முன் வரும் வறிய மனிதர்களுக்கும் இடையே நடக்கும் வர்க்கப் போராட்டத்தின் ஆடுகளம்  தான்  ஜல்லிக்கட்டு என்றும் கொள்ளலாம்.  வர்க்கப் போராட்டத்தின் கண்ணோட்டத்தில் பார்த்தால்,  (தன்னை அணைய வருபவனை அவ்வப்பொழுது கொடூரமாக குத்திக் கிழித்துப் போடும்) முரட்டுக்காளை,ம் மனிதனுக்கும் - மனிதனுக்கும் நடக்கும் அதிகாரப் போராட்டத்தில் ஏன், எதற்கு என்றே தெரியாமல் கலந்து கொள்ளும் அப்பிராணியாகவும் தோன்றுவது வேடிக்கையானது.  




இத்தகைய போட்டிகள், மனிதனின் விளையாட்டிற்காக மிருகங்களை வதை செய்வது என்று எளிதாக ஒதுக்கி விட முடியாது.  மனிதனுக்கும் அவன் வளர்க்கும் மிருகங்களுக்கும் உள்ள உறவு சிக்கலானது, தொன்மையானது.  குறைந்த பட்சம், 4000 ஆண்டுகளுக்கு முந்தைய,சிந்து சமவெளி நாகரீக அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட அச்சுகளில் ஒன்று கூட ஏறு தழுவதலை சித்தரிக்கிறது.     பல சமூகங்களில் ஆடு, மாடு போன்ற வளர்ப்பு பிராணிகளே ஒரு மனிதனின் செல்வத்தையும், சமூக அந்தஸ்தையும் நிர்ணயித்தன.  ஒரு மனிதனின் செல்வாக்கிற்கு சவால் விடும் வழி அவனது ஆநிரைகளை கைப்பற்றுவது  (ஆநிரை கவர்தல்) என்று சங்கப் பாடல்களில் குறிப்பிடப் படுகிறது.  அவ்வாறு களவு போன ஆநிரைகளை மீட்டெடுப்பது  வீரத்தின் அழகு என்றும் கருதப்பட்டது.
சிந்து சமவெளி நாகரீகத்தில் எடுக்கப்பட்ட அச்சில் காணப்படும் காளைச் சண்டை (3000 ஆண்டுகளுக்கு முந்தைய அச்சு)
மனிதனுக்கும், அவன் வளர்க்கும் மிருகத்திற்கும் இடையே உள்ள உறவின் இன்னொரு பரிமாணம், நிச்சயமின்மை (unpredictability).  என்ன தான் வளர்ப்பு பிராணியாக இருந்தாலும், அதன் இயல்பான குணங்கள் முற்றிலும் போய் விடுவதில்லை.  எந்த அளவிற்கு மிருக குணம் எஞ்சி இருக்கிறது என்பது, அதன் வகை மற்றும் வளர்ப்பு முறையைப் பொறுத்தது.  அந்த மிருக இயல்பைக் கண்டு உள்ளூர அச்சமும், அதை வெல்வதில் விளையும் மனக் கிளர்ச்சியும் தான் மிருகத்திற்கும் மனிதனுக்கும் இடையில் நடக்கும் போட்டிகள்.


ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, போன்ற லத்தீன நாடுகளில், மாடோடு நடக்கும் சண்டைகள், இன்றும் மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்று இருக்கின்றன. குறிப்பாக, ஸ்பெயினில் நடக்கும் மாட்டுச் சண்டை, பெரும் சடங்குகளுடன், சம்பிரதாயங்களுடன் நடத்தப்படுவது.  ஒரு, மேற்கத்திய இசைக் கச்சேரி, போல பல பாகங்கள் கொண்டது.  அதில் பங்கேற்கும் சிறந்த காளை மாட்டுச் சண்டையாளர்களை  (matador) அந்த தேசமே கொண்டாடுவது இன்றும்   வழக்கமாக உள்ளது.   ஐக்கிய அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் போன்ற மாநிலங்களில் இன்றும் ரோடியோ (rodeo)  என்ற முரட்டுக் காளைச் சவாரிகள் பிரபலமாக உள்ளன.  
(மேலே) ஸ்பெயின் நாட்டின் முதல் மாட்டடோரா (matadora) எனும் பெண் மாட்டுச் சண்டை வீரர் கிறிஸ்டீனா சான்செஸ். (கீழே) கொஞ்சம் கவனமில்லாமல் இருந்த ஸ்பானிய மட்டடோரின் கதி.


நம் ஊரில், சங்க காலம் தொட்டு இருந்து வரும்   ஏறு தழுவுதல்,   இன்று அருகிப் போய் வரும் ஒரு விளையாட்டாக இருக்கிறது.    உங்களை விட பத்து மடங்கு எடையும்,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியில் பட்டை தீட்டப் பட்ட ரௌத்திரமும்,  மனிதனைக் கூறு போடுவதற்கு என்றே கூராக்கப் பட்ட கொம்புகளையும், கொண்ட காளையை,   எந்தப் பாதுகாப்பு கவசமும் இல்லாமல்  எதிர்கொள்வது குறித்த  பிரமிப்பு கூட என் தலைமுறையினருக்கு  இல்லாமல் போய் விட்டதே   என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.


ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், உங்கள் மனதில், ஜல்லிக்கட்டைப் பற்றிய ஒரு புதிய திறப்பை உருவாக்கலாம்.   இந்தப் புத்தகம் ஜல்லிக்கட்டின் நுட்பங்களை கதை போகிற போக்கிலேயே சொல்வது சிறப்பானது. 


சி.சு. செல்லப்பா  எழுதியிருக்கும் விதம்,   நம்மை ஜல்லிக்கட்டில் ஒரு நல்ல வசதியான இருக்கையில் உட்கார வைத்து, பார்க்க வைத்ததைப் போல் உள்ளது

No comments:

Post a Comment