Sunday, August 28, 2011

சாவு நிகழ்த்தும் உரையாடல்


நாவல் : இடைவெளி
ஆசிரியர் : எஸ். சம்பத்
முதற்பதிப்பு : 1984
பக்கங்கள் : 108
       எஸ். சம்பத்தின் அச்சு வடிவம் கண்ட ஒரே நாவல் இடைவெளி. இந்த ஒரு நாவல் மூலமே தமிழ் இலக்கிய உலகில் அழியாத இடம் பிடித்து விட்டார். சம்பத். இந்த நாவல் பற்றி எழுத்தாளர்களும், இலக்கிய விமர்சகர்களு ஒருசேரப் புகழ்ந்து எழுதியுள்ளதையெல்லாம் படித்திருக்கிறேன். ஒருமுறை அய்யனார் தன் தளத்தில் இடைவெளி பற்றிய தன் வாசக அனுபவத்தை எழுதியிருந்தார். எழுத்தாளர் திலீப் குமாரிடமிருந்து அந்த நாவலை ஒளிநகலெடுத்து வைத்துக் கொண்டதாகவும், அதை மின் புத்தகமாக மாற்றி வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார். அதன் பிரதியொன்று அனுப்பித்தர இயலுமா என்று கேட்டிருந்தேன். உடனே செய்தார். அவருக்கு நன்றி.
       முன்னுரையில் சம்பத்தே குறிப்பிடுவதைப் போல, இடைவெளி சாவு என்கிற விஷயத்தைக் குறித்து ஆராய்கிறது. தோல் தொழிற்சாலையில் கணக்கெழுதும் வேலை பார்க்கும் தினகரனை, சாவு பற்றிய சிந்தனையே சதா ஆக்ரமித்துக் கொள்கிறது. சாவு என்பது எவ்வாறு நிகழ்கிறது? எல்லாச் சாவுகளுக்கும் பொதுப்படையான தன்மை ஏதேனும் உண்டா? சாவை நாம் தெளிவாக அறிந்து கொள்ளும்படி வார்த்தைகளால் விளக்க இயலுமா? என்பன போன்ற கேள்விகள் அவரை அரித்துக் கொண்டே இருக்கின்றன. நாள் முழுவதும் இதுபற்றிச் சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டுமென்பதற்காகவே நல்ல கல்வித்தகுதி இருந்தும் உடலுழைப்பு மட்டுமே தேவைப்படும் தோல்கள் கட்டும் பிரிவுக்குத் தன்னை மாற்றச் சொல்கிறார். நாள் முழுதும் தோல்கள் கட்டும் பிரிவில் பணிபுரிந்தபடி, சாவு பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருக்கிறார். தினமும் வேலை முடிந்து வெளிவந்த போதும் கூட தெருவில் நடந்தபடியும், கடற்கரையில் படுத்தபடியும் இதே சிந்தனைதான். இவ்வாறுதான் ஒருநாள் கடற்கரையில் படுத்துக் கிடக்கையில் சாவு என்பது ஓர் இடைவெளி என்று அவருக்குத் தோன்றுகிறது.
       தொழிற்சாலையில் சிந்தனையில் மூழ்கியபடியே வேலையில் அவர் ஈடுபட்டிருப்பதைக் கண்ட இவான்ஸ் என்ற மேற்கு நாட்டவன் ஒருவன் இது குறித்து விசாரிக்கிறான். தன் வீட்டுக்கு விருந்துண்ண அவரை அழைக்கிறான். இவ்வளவு ஏழ்மையிலும், பொருளாதார நசிப்பிலும் வாழ்வைத் தத்துவ ரீதியாக அணுகும் இந்தத் திமிர் இந்தியர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று வியக்கிறான் இவான்ஸ். அதற்கு ‘ஆன்மா’ என்று பதிலிறுக்கிறார் தினகரன்.
       தன்னுடைய ஒன்று விட்ட பெரியப்பா மரணப்படுக்கையிலிருப்பதாகச் செய்தி வந்திருப்பதாகவும், கடைசியாகத் தினகரனைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் வீடு வந்தவுடன் மனைவி சொல்கிறாள். தினகரனுக்கு மரணம் ஒன்று நிகழ்வதை அருகிலிருந்து பார்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகப் படுகிறது. பெரியப்பா வீட்டுக்குச் சென்று அவர் இறக்கும் வரை அங்கேயே தங்குகிறார். அவர் மரணம் அடையும் விநாடியில் அவர் முன்பாகவே அமர்ந்திருக்கிறார். சாவு என்பது ஓர் இடைவெளி என்ற அவரது கருத்து அவரைப் பொறுத்தவரை வலுவடைந்தபடியே இருக்கிறது.
       சாவு அவ்வப்போது தோன்றி அவருடன் உரையாடல் நிகழ்த்த ஆரம்பித்து விடுகிறது. தினகரன் இந்தச் சிந்தனையால் இருப்புக் கொள்வதில்லை. பேசாமல் சாதாரணமாக வாழ்ந்து பார்க்கலாமே என்று ஒரு பத்து நாள் முயற்சி செய்கிறார். மீண்டும் அதே சிந்தனைகள். ஒரு மருத்துவரைச் சந்தித்து சாவு பற்றி மருத்துவ உலகம் என்ன முடிவுகளை வைத்திருக்கிறது என்று அறிய விழைகிறார். வீட்டுக்குள் ஓர் அறையில் விட்டத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிவிட்டு, அதையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் மீண்டும் மீண்டும் சாவு ஓர் இடைவெளி என்ற முடிவே அவருக்குள் உறுதியடைகிறது.
       மறுநாளும் சாவு நிகழ்த்தும் உரையாடல் தொடர்கிறது. தினகரனத் தன் முன் மண்டியிடச் சொல்கிறது சாவு. அப்போதைக்குச் சாவின் முன்னிலையில் மானசீகமாக மண்டியிடுகிறார் தினகரன்.
       மரணம் என்பதையே கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் இடைவெளி என்று சொல்லலாம். ஜே.ஜே சில குறிப்புகளைப் போன்ற கருத்தியல் நாவலென்றும் கூறப்படுகிறது. கோர்வையான சம்பவங்களேதுமின்றி, ஆனால் தொகுக்கப்படும் சம்பவங்களனைத்தும், நாவலில் அலசப்படும் கருத்தையொட்டியும், அதற்கு வலுசேர்க்கும் வண்ணமுமே அமைந்துள்ளன. சம்பத்தின் மொழிநடை எளிமையானதும், நேரடித்தன்மையும் கொண்டது. தினகரன் என்ற கதை நாயகனின் வறண்ட சிந்தனை தோய்ந்திருப்பதால் கதையின் நடையும் வறண்டிருப்பதைப் போலிருந்தாலும், ஆங்காங்கே பளிச்சிடும் வாக்கியங்கள்.
       ‘ஒரு சின்ன மேஜையில் வைக்கப்பட்டிருந்த கொஞ்ச நஞ்ச திராட்சைப் பழமும், இரண்டு ஆப்பிளும், ஒரு வெள்ளி டம்ளரில் பாலும் உயிரைக் கேலி செய்வது போலிருந்தது’
       ஒருமுறை வாசிப்பில் இடைவெளி என்ற நாவலில் சம்பத் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்வது சிரமம். தஸ்தாயெவ்ஸ்கியைப் போன்றதொரு எழுத்தாளனாக வேண்டுமென்ற மகத்தான கனவுகள் கொண்டிருந்த சம்பத் விரைவிலேயே நம்மை விட்டுப் பிரிந்தது தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு பேரிழப்புதான். அவரது அற்புதமான படைப்பான இடைவெளியை நான் வாசித்தது நிச்சயம் நான் செய்த அதிர்ஷ்டம்தான்.

12 comments:

Raja M said...

படிக்கத் தூண்டும் பதிவு. மிக்க நன்றி.

சாவு ஒரு இடைவெளி என்றால், எதற்கும், எதற்கும் இடையே உள்ள இடைவெளி? இந்தப் பிறவிக்கும், அடுத்த பிறவிக்கும் இடையில் உள்ள வெளியா? அப்படியானால், அது மறுபிறப்பை நம்பும் இந்தியச் சமூகத்தில் மிகவும் எளிதாகக் காணப்படும் கருத்துத் தானே?

வேறு எதையாவது குறிப்பிடுகிறாரா? எந்தப் பதிப்பகம் இதை முதலில் வெளியிட்டது? இம்மாதிரி விவாதங்கள், இந்தப் புத்தகத்தை மீண்டும் பதிப்புக்குக் கொண்டு வரக் கூடும். நன்றி.

மதுரை சரவணன் said...

padikka thuundukirathu..vaalththukkal

Jegadeesh Kumar said...

பதிப்பித்தது CRE - A என்று போட்டிருக்கிறது. மேலும் அச்சடித்தது அன்னம் பிரிண்டர்ஸ் என்றும் போட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் மறுபதிப்பாக வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

Jegadeesh Kumar said...

இந்த நாவலின் மின் பதிப்பு யாருக்கேனும் தேவையெனில் பின்னூட்டத்தில் மின்னஞ்சலைத் தரவும். அனுப்பி வைக்கிறேன்.

Anonymous said...

'இடைவெளி' - தமிழில் வந்த சிறந்த பத்து நாவல்களில் ஒன்றென ஒரு இலக்கியவாதி மதிப்பிட்டிருப்பதை நினைவுகூர்கிறேன். இம்மாதிரியான விமர்சனம், புதைந்துபோய் கிடக்கும் அரிய சிறந்த நாவல்களைப் பரவலாக வாசகர் மத்தியில் கொணரும் நல்ல முயற்சி - நன்றி.

Anonymous said...

அன்புள்ள ஜெகதீஷ்குமார், எனக்கு மின்புத்தகத்தை அனுப்பமுடியுமா? மின்னஞ்சல் rv dot subbu at gmail dot com

Jegadeesh Kumar said...

அன்புள்ள ஆர்.வி

அனுப்பி விட்டேன்.

suresh said...

Dear Jadeeshkumar
Nice post.
Its true it is one of the best novels.
Kindly send me the soft copy to this mail id.
ssureshkumar77@gmail.com
with regards
S.SURESHKUMAR

Anonymous said...

திரு. ஜெகதீஷ்குமார்,

நான் பல ஆண்டுகளாகப் படிக்க விரும்பிய புத்தகம். தயவு செய்து மின் புத்தகம் அனுப்ப இயலுமா? நன்றி.

சரவணன்.
மின்னஞ்சல்- sssaravanan AT vsnl DOT net

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Unknown said...

ஜெகதிஸ் ஸார் எனக்கும் mail அனுப்ப முடியும்மா mcwash13@gmail.com

Unknown said...

please send a copy to me too. srameshdking@gmail.com

Post a Comment