Wednesday, June 16, 2010

மத்தகம் - ஜெயமோகன்

மத்தகம்

ஆசிரியர்: ஜெயமோகன்

பரிந்துரை: சண்முகம்


குட்டியாய் இருந்தபோதே வெல்லம் கலக்காத சோற்றை சாப்பிடாது கேசவன். ஒரு ராஜ்ஜியத்திற்கே அதிகாரம் செலுத்தும் இளையதம்புரானின் செல்லப் பிராணியாக இருப்பதனால் தான் தனக்கு இந்த அதிகாரம் என்று வெல்லச் சோற்றின் ருசியை விட அதிகாரத்தின் ருசியை கேசவன் சிறுபிராத்திலிருந்தே நன்கு உணர்ந்து தான்வளர்ந்திருக்கும். தன்னை ஒருமுறை 'சனியன்' என்று திட்டிய மூத்த யானைப்பாகன் சீதரன் நாயர் என்கிற ஆசானை, தன் கால்களுக்கு இடையில் கிடத்தி, தன் காலை நிதானமாய் அசானின் கால் மீது வைத்து மூங்கில் குச்சியை ஒடிப்பது போல ஒடித்து அதிகார அடுக்கில், தன் நிலையைத் தெளிவுற உணர்த்துகிறது. ஆசான், கேசவனின் இந்த அதிகார வெளிப்பாட்டை மிக இயற்கையான, ஏன் தெய்வாம்சமான் ஒன்றாகவே ஏற்றுக்கொண்டு,
கேசவனுக்குக் கீழ் தன்னை இருத்திக்கொள்கிறார். ஆசானின் அதிகாரம் அவரின் கீழுள்ள கேசவனை பராமரிக்கும் மற்ற யானைப்பாகர்கள் மீது தான். அதிகாரத்துக்கு உட்படுவதிலும் சரி, அதிகாரத்தை மற்றவர் மேல் செலுத்துதலிலும் சரி, முறை பிறழாத, எல்லை மீறாத ஒரு நெறி ஆசானிடத்தில் என்றைக்கும் உண்டு. அடுத்து அருணாச்சலம். அதிகாரத்திற்கு என்றைக்கும் கீழ்பணிந்து நடப்பதற்கென்றே பிறந்த இலவம்பஞ்சு போன்றவர். துரதிர்ஷ்டவசமாய் ஒருமுறை துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி, அதற்கு எதிர்வினையாய் அதிகாரம் என்னும் நெருப்பை எடுத்தாள முனைந்து, அத்தீயில் தன்னையே மாய்த்துக் கொண்டவர். அடுத்து, பரமு என்கிற பரமன். செல்வாக்குள்ள சூழலில் பிறக்கவோ, வளரவோ அமையப்பெறாவிடிலும், அதிகாரத்தை நன்கு புரிந்து கொண்ட ஜீவன். அதிகாரத்திற்குப் பெரும்பாலும் மற்றவர்களைப் போல் தன்னை முழுமையாக ஒப்படைத்து அடிபணிந்து, பொறுமையாக காத்திருந்து அனிச்சையாக நிகழும் மிகச்சரியான தருணங்களைப் பயன்படுத்தியோ அல்லது தன்னிச்சையாக வாய்ப்புகளை உண்டாக்கிக்கொண்டோ மனிதர்களையும் கேசவனையும் அடக்கி ஆளப்பிறந்தவன். இவ்வகை மனிதர்களே ஒரு கட்சி, சமுதாயம், ஏன் நாட்டின் விதியையே தீர்மாணிக்கும் தலைவர்களாகவும் தங்களை முன்னிருத்திக் கொள்வதும் உண்டு. நாலாவதாக வருவது சுப்புக்கண். அதிகாரத்தின் அடுக்கதிகாரத்தில் அடிமட்ட நிலையான முழுமையான கீழ்படிதல் அல்லது சரணாகதியை, ஆசான் சீதரன் நாயர் முதல் பாடமாய் சுப்புக்கண்ணுக்கு ஓத, அதை மிகப் பிரயத்தனத்தோடு கற்றுக்கொண்டு கேசவனிடத்து சரணடைவதிலிருந்து ஆரம்பமாகிறது சுப்புக்கண்ணின் வாழ்க்கைப்பாதை. தேறிவிடுவான் என்று தான் படுகிறது.


பரமன், கேசவனிதத்தில் சரணடைந்ததால் தான் ஆசானை கேசவனின் கால்களிலிருந்து மீட்க முடிந்தது. ஆக, ஆசானுக்காக உயிரையும் கொடுக்க பரமன் முனைந்தான் என்பது உண்மைதான், வேறு வழி இல்லாததால் !ஆனால், அருணாச்சலத்திடம் பரமன் சிக்கிக்கொண்ட போது, வேறு வழிகள் இருந்தன. இழப்பதற்கு ஒன்றுமில்லைஎனும் நிலையில் ஆசானுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராயிருந்த பரமனால் இழப்பதற்கு நிறையவே இருக்கும் போது அருணாச்சலத்தின் உயிரையும் எடுக்கவும் முடிகிறது. கேசவன், இளைய தம்புரானையே தன் ஒரே ஆசானாக கண்டது. இளைய தம்புரானின் அதிகாராவீச்சு பாயும் தூரத்தை கேசவன் நன்றாகவே உணர்ந்திருந்தது. கேசவன் இளைய தம்புரானின் நட்பு வேண்டி விளைந்ததா அல்லது அதனால் தான் அடையும் அதிகாரம் வேண்டி நின்றதா என்னும் கேள்விக்கும் இடமுண்டு. பெருவெள்ளத்தின் போதும், பாகர்கள் நால்வரையும் துளியும் பொருட்படுத்தாமல், தன் ஆசானின் அரண்மனைக்கு நீந்தியே சென்றடைந்து, தனது அதிகாரச் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்கிறது. இளைய தம்புரான் மரித்த நிலையில், தன் கையறு நிலையை உணர்ந்து கலங்கி நலிவுற்று நிற்கிறது. பரமனும் கேசவனின் மத்தகத்தை அடக்கும் அதிகாரத்தை வலியதாய் ஏற்றுக்கொள்கிறான். கேசவன் ஒரு வகையில் பரமனை ஒத்தது தான். அதனால் தான் பரமனைத் துல்லியமாக புரிந்து கொண்டிருக்கிறது. முடிவில், பரமனுக்கு ஈடுகொடுக்க முடியாமல், மத்தகத்தை தாழ்த்தி அடிபணிந்து விடுகிறது. கேசவனின் அறம் மீது பெருநம்பிக்கை கொண்டிருந்த ஆசான், அருணாச்சலத்தின் சாவிற்கு கேசவனே காரணம் என்ற பொய்யை நம்புவதால், ஆசான் மீது தான் அதுகாரும் செலுத்திய அதிகாரம் தகர்கிறது. இதில் இழப்பு இருவருக்குமே. அருணாச்சலம் இறந்த இரண்டாவது நாளிலேயே அவனது மனைவியைப் பெண்டாள வந்த பரமனை, அரிவாள் மணை கொண்டு துரத்தியவள், அதன்பின் மூன்றே நாட்களில் பரமனின் முழு ஆதிக்கதிற்குள்ளாவது, நியாயத்திற்கும் அர்த்தத்திற்கும் அப்பாற்பட்ட நடைமுறை யதார்த்தம். இப்படித்தான் மானுட வாழ்வு என்றென்றைக்கும் பயனித்து வந்திருக்கிறது.


மனிதனுக்கும் விலங்கினங்களுக்கும் உள்ள உறவு, பெரும்பாலும் ஆண்டான்-அடிமை வகையைச் சார்ந்ததே. விதிவிலக்கும் உண்டு, அது மனிதனுக்கும் யானைக்கும் உள்ள உறவு. மனிதன் தன்னிடம் இல்லாத ஒன்றை, கடவுளிடம் காண வேண்டிய ஏதோ ஒன்றை யானையிடமே காண்கிறான். அறம் சார்ந்த் புரிதலும் அதை ஒட்ட ஒழுகலும் மனிதனைக்க் காட்டிலும் யானையிடமே மிகுதியாய்க் காண முடிகிறது. மனிதன் தன்மீது அதிகாரம் செலுத்த அருகதையற்றவன் என்று யானைகள் நினைப்பதால்தான் என்னவோ, பெரும்பாலும் யானைப்பாகர்கள் அவர்கள் பராமரித்த யானையாலே கொல்லப்படுகிறார்கள். அப்படி கொல்லப்பட்டால், மனிதன் பாரம்பரியமாக யானைக்கு இழைத்த தீங்கிற்கு உரித்தான தண்டனையே என்று மனிதன் நினைக்கிறான். மனிதர்களிடையே, அருங்குணம் நிரம்பியவர்கள் அரிதாய் இருப்பது போல், யானை இனத்திலும் உண்டு. வயது முதிர்ந்த பட்டத்து யானையான நாராயணனை, பின்புறத்திலிருந்து தாக்கிய கேசவன் அதில் ஒன்றல்ல. ஆனால், தாக்கப்பட்டு குருதி உதிர நின்றாலும், கேசவன் வெலவெலத்து மண்டியிட்டு குனிந்து நின்று பணிந்ததால், பெருந்தண்மையாய் கேசவனை மன்னித்த நாராயணன், பெருங்குணம் நிரம்பியதுதான்.


தந்தையும் பாட்டனும் யானையால் கொல்லப்பட்டு, விதவையான அம்மை அடுத்த யானைப்பாகனிடம் வாழப் புகுந்து, அம்மையைப் பெண்டாள வந்த யானைப்பாகனால் சிறு வயதிலேயே துரத்தியடிக்கப்பட்டு, பட்டினி கிடந்து. பின்னர் சிறு பையங்கள் மீது பிரேமம் கொண்ட இன்னொரு யானைப் பாகனிடம் வேலையிலமர்ந்து என்று பரமனின் கதைபோல, ஒவ்வொரு யானைப்பாகனுக்குப் பின்னால் என்னவெல்லாம் துர்பாக்கியமும் வன்முறையும் இருந்தனவோ? இந்த உக்கிர வக்கிரங்களை தற்காலிகமேனும் மறக்கத்தான் காமம் எனும் வடிகாலோ? மனிதன் மற்றும் யானையின் ஆதிக்கத்திற்கு ள்ளாகும் யானைப்பாகன், அதிகாரத்தால் இழந்த வாழ்க்கையை காமத்தால் மீட்டெடுக்க முனைகிறான். ஆனால் அக்காமத்தை வேண்டுகையில், மீண்டும் அதிகாரத்தையே நாடுவது விந்தையான விஷச் சுழற்சி.


மனிதன் - மனிதன், யானை - யானை, மனிதன் - யானை என்று பல அடுக்குகளில் அதிகாரம் ஊடுருவி விளையாடுகிறது. வாழ்க்கையில், மனிதனை ஆட்கொள்ளும் உணர்ச்சிகள், அறங்கள், குணங்கள் பலவாராயினும் அதிகாரமே ஒரு அகன்ற ஆலமர விருட்சமாக, பல கிளைகள், விழுதுகள் கொண்ட ஒரு அடுக்கதிகாரமாக விளங்குகிறது. இந்த வல்லிய அதிகாரத்தின் கரிசனத்தில் தான் மற்ற மெல்லிய உணர்ச்சிகளான நெகிழ்ச்சி, அறம், அன்பு ஆகியவை வரையறைக்கப்படுகிறது. அதிகாரக் கிளைகளினூடே கசியும் மெல்லிய நிலவொளி போல அறத்திற்கும், ஆலமரத்தின் கீழ் தத்துப்பித்தென விளையாடும் அணில்பிள்ளைகளைப் போல் நெகிழ்ச்சிக்கும் - வாழ்க்கையில் இடமுண்டு.


என்னதான் அதிகாரத்தால் சிறைபட்ட வாழ்க்கை என்றாலும், அதற்குள்ளும் எத்தனை மகத்தான உறவுகள், சாத்தியங்கள் ! கேசவனுக்கும் இளைய தம்புரானுக்கும் உள்ள பரஸ்பர நட்பு. ஆசானுக்கும் கேசவனுக்கும் உள்ள நுட்பமான உறவு, நாராயணனின் பெருந்தன்மை என வாழ்க்கை வரிந்து கட்டிக்கொண்டு அதிகாரத்துடன் நித்தமும் போராடிக்கொண்டே தான் இருக்கிறது !


ஐந்தே அத்தியாங்களில் ஜெயமோகன் எழுதிய இக்குறுநாவல், எந்த ஒரு பேரிலக்கியத்திற்கும் நிகரானது. பெருநாவல் தொட முயலும் சிகரங்களை, இக்குறுநாவல் சிரமமேயின்றி கைகொள்கிறது. ஜெயமோகனுடய வலைமனையில் 'மத்தகத்தை' இலவசமாக படிக்கலாம் என்றாலும், புத்தகமாய் வாங்கிப் படிப்பது ஒரு வாசகன் என்ற முறையில் இந்த அற்புதமான படைப்பிற்கும், ஜெயமோகனுக்கும் நாம் செய்யும் குறைந்தப் பட்ச மரியாதை !

2 comments:

Jegadeesh Kumar said...

//புத்தகமாய் வாங்கிப் படிப்பது ஒரு வாசகன் என்ற முறையில் இந்த அற்புதமான படைப்பிற்கும், ஜெயமோகனுக்கும் நாம் செய்யும் குறைந்தப் பட்ச மரியாதை !//

சரியாச் சொன்னீங்க!

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment